WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி

தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி


ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் சுவைக்கும்போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும். தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது. 

தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.  

தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். தர்பூசணி ஜுஸ், பாயசம், ஸ்வீட், ஐஸ்கிரீம் என இதில் ஏராளமான உணவுப்பொருட்களும் தயாரிக்கிறார்கள். மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம், தர்பூசணியில் தற்போதுதான் சாத்தியமாகிவருகிறது. தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகியுள்ளது. உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது.