WELCOME TO Free Guide for All like MS office, Document Control etc.. Contact BY renuka1971@gmail.com

ஆரோக்கிய பெட்டகம்: மஞ்சள் பூசணிக்காய்


ஆரோக்கிய பெட்டகம்: மஞ்சள் பூசணிக்காய் 




மார்கழியை நினைவுபடுத்துகிற முக்கியமான அடையாளங்களில் ஒன்று கோலங்களை அலங்கரிக்கிற பரங்கிப்பூ. அதிகாலையில் வாசல் தெளித்து  மெழுகி, பெரிய பெரிய கோலங்கள் இட்டு, நடுவில் சாணம் வைத்து, அதில் பரங்கிப்பூவை செருகி வைப்பது வழக்கம். சாணம் என்பது கிருமிநாசினி.  அதன் நடுவில் வைக்கப்படுகிற மஞ்சள்நிற பரங்கிப்பூவானது மங்கல அடையாளம். மலர்ச்சியை வரவேற்கும் வழி என்பது நம்பிக்கை. பரங்கிப்பூவைப் போலவே பரங்கிக்காய்க்கும் நல்ல குணங்கள் உள்ளன. ‘மஞ்சள் பூசணி’ என்று அழைக்கப்படுகிற பரங்கிக்காயின் அருமை  பெருமைகளை அள்ளி வழங்குகிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல்    -    26 கிலோ கலோரி
புரதம்     -    1 கிராம்
கொழுப்பு     -    0.1 கிராம்
கொலஸ்ட்ரால்    -0 கிராம்

மலையாளிகள் சமூகத்தில் ‘மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி’ என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம்  பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். பிராமண வீடுகளில் தயாரிக்கப்படும் பரங்கிக்காய் சாம்பார் மிகவும்  சுவை நிரம்பியது. இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு  வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும்.

தோற்றம்

• பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர். சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட  இது பயன்படுகிறது.

குணங்கள்

• பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை  கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும்  உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும்.

• ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும்.

பயன்கள்

• மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை.  இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின்  ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.

• வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும  ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

• இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது.

• Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது.

• பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

• ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம்.

• தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.

• பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு  உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது  முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

• பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம்  மற்றும் மக்னீசியமும் உள்ளது.

• பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப்  போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.

• பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

எப்படித் தேர்ந்தெடுப்பது? பத்திரப்படுத்துவது?

• பரங்கி வருடம் முழுவதும் எளிதாக கிடைக்கக் கூடியது. அது வெட்டுப்பட்டுள்ளதா, நிறம் மாறுபட்டுள்ளதா, ஏதேனும் கோடுகள் உள்ளதா என்று  பார்த்து வாங்க வேண்டும்.

• வெட்டி வைக்கப்பட்ட பரங்கியை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் சில நாட்கள் வரை பாதுகாக்கலாம்.

மஞ்சள் பூசணி சூப்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 1 கப் (சின்னச் சின்னதாக சதுரங்களாக வெட்டியது), சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 2, வெங்காயத் தாள் - 1 கட்டு, சிறியதாக  நறுக்கிய கேரட் - 1, வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கருப்பு மிளகு - ருசிக்கு, உப்பு, தண்ணீர் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கடாயை  சூடேற்றி அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும். அதில் பரங்கிக்காய், கேரட்,  சிறிது வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீரும் சேர்த்து சமைக்கவும்.பிறகு இதனை ஆறவைத்து நன்கு மசிக்கவும். சாப்பிடும்  முன் சூடுபடுத்தவும். மிளகு மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து அலங்கரிக்கவும்.

பரங்கிக்காய் சாலட்

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 250 கிராம், கெட்டித் தயிர் - 1 கப், சீரகம்- 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை - 1/4 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது ?

பரங்கிக்காயை சீவி வேக விடவும். கடாயை சூடாக்கி எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்துத் தூளாக்கவும். இவை  எல்லாவற்றையும் கலந்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறவும்.

பரங்கிக்காய் பச்சடி

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் - 1 பெரிய பத்தை, புளி - எலுமிச்சை அளவு, பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன், சாம்பார் தூள் - 1 டீஸ் பூன், மஞ்சள் தூள் - 1/4  டீஸ்பூன்.

தாளிக்க... எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 துளி, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பரங்கிக்காயின் தோலையும் விதை களையும் நீக்கி விட்டு சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பரங்கி துண்டுகளை போட்டு  அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பரங்கிக்காய் நன்கு வேகும் வரை  கொதிக்க விடவும். புளியை கரைத்துக் கொள்ளவும். இதனை கொதிக்கும் பரங்கிக்காயில் சேர்த்து இத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்கு  கொதித்தவுடன் ஆற வைத்து  மசிக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.


visit